Monday, June 29, 2015

தனிமை




தனிமை...

ஒரு கொடிய நோய்.

ஒரு மனிதன் எத்தனையோ வகையான மன வலிகளிலிருந்து தப்பிக்க தனிமையை நாடுகிறான்.
தனிமை ஓர் தற்காலிகமான நிம்மதி, அவ்வளவுதான்.

தனிமை நிறைய நேரங்களில் நல்லதுபோலவே காட்சியளிக்கும்.
தனிமைதான் ஒரு மனிதனை உண்மையில் தான் யார் என்பதை புரியவைக்கும்.
தனிமைதான் எடுத்த காரியத்தை செவ்வணே செய்து முடிக்க பேருதவியாய் இருக்கும்.
தனிமைதான் மனதை ஒரு நிலைக்கு கொண்டு வர வழிவகுக்கும்.
தனிமைதான் அறிவை வளர்க்க ஒரு வாய்ப்பாக இருக்கும்.
தனிமைதான் அறிவின் சிந்திக்கும் சக்தியை அதிகரிக்க செய்யும்.
எல்லாம் சரிதான்...

ஆனால்,
ஓர் உறவு கூட இல்லாத மனிதனின் நிலைமை என்னவாக இருக்கும்?
ஒரு நண்பன் கூட இல்லாத மனிதனின் நிலைமை என்னவாக இருக்கும்?
தனித்து விடப்பட்ட ஓர் உயிரின் நிலை, மனநிலை என்னவாக இருக்கும்?

எழுதியது,
ஆ.வி.குமார்.

Wednesday, November 13, 2013

குழந்தை...

குழந்தை...

நண்பர்கள் மூவர் சேர்ந்து ஒரு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
இந்த உலகிற்கு புதியதாய் ஓர் மனித உயிர்.
அந்த உயிரை சார்ந்தவர்கள் மகிழும் மகிழ்ச்சியில் பங்குகொள்ள இந்த மூவரும் செல்கின்றனர்.
கையில் குழந்தைக்கு தேவையான பஞ்சு மெத்தை-யை வாங்கிச் செல்கின்றனர்.
குழந்தையும், தாயும் இருக்கும் அறைக்குள் - குழந்தையை பார்த்து மகிழ்கின்றார்கள்.

அந்த மகிழ்ச்சியில் மூவரில் இருவர் பேசிக்கொள்கின்றனர்...
நபர் 1: குழந்தை அவங்க அப்பாவை மாதிரியே இருக்கு பார்த்தியா?
நபர் 2: ஆமான்டா...!

(இங்கே நபர் 3, எதுவும் பேசவில்லை... சப்தமில்லாமல் நினைக்கிறார்...)
(நபர் 3: அவங்க அப்பா மாதிரி இல்லாமா? பக்கத்து வீட்டுக்காரன் மாதிரியா இருக்கும்...)

நபர் 2: டேய் அந்த மூக்கை பார்த்தியா... அவங்க அப்பா மாதிரி அப்படியே! ஜெராக்ஸ் காப்பி...!
நபர் 1: அது அவங்க பேமிலி சிம்பல்றா...!
(நபர் 3: டேய் இதெல்லாம், உங்களுக்கு ஓவரா தெரியலையா...! மகிழ்ச்சியில் என்ன பேசுகிறோம்னு தெரியாம பேசிட்டிருக்கீங்கடா...)

சிறிது நேரம், அங்கிருந்தவர்களிடம் பேசி வெளியில் வருகின்றனர்...
நபர் 3, இப்பொழுதும் மனதிற்குள் சில எண்ணங்களை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

(மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?
ஆஸ்பித்திரிக்கு குழந்தைய பார்க்க வந்தா, குழந்தை ஆரோக்கியமா இருக்கா? ஏதாவது பிரச்சினை இருக்கா என்று கேட்கறதவிட்டு
டேய் மூக்க பார்த்தியா, வாய பார்த்தியா - அவங்க அப்பாவ மாதிரியே இருக்கு, அவங்க அம்மாவ மாதிரியே இருக்கு னு அர்த்தமில்லாமா
பேசுறானுங்க? இதில் என்ன ஆச்சர்யம். பெற்றோரின் சாயிலிலோ, தாத்தா பாட்டி சாயலிலோ - குழந்தை பிறப்பது இயற்கைதானே?
பக்கத்துவீட்டுக்காரன் சாயலில் பிறந்தால்தான் ஆச்சர்யப்படலாம்!? லூசு பசங்க...

இல்ல, இப்படி சொல்றதுல ஏதாவது விஷேச காரணங்கள் இருக்குமோ? இப்படியெல்லாம் சொன்னால்தான் அந்த குழந்தையை பெற்றெடுத்த
தாய்க்கு சந்தோஷமோ? அவளுக்கு தெரியாதா குழந்தை யார் மாதிரி பிறக்கும் என்று? இவர்கள் போய்தான் ஆனித்தரமாக அப்படி சொல்ல
வேண்டுமோ? என்ன கொடுமா சார் இது...!

இப்படி பேசறதால, ஏதோ உள்குத்து இருக்கறமாதிரி எனக்கு தோனுது? இல்ல, இப்படியே பேசி பழக்கப்பட்டுடானுங்களோ?
குழந்தை பிறந்திருக்குன்னு பார்க்கப்போனா, முதல்ல, குழந்தை யார் மாதிரி இருக்குன்னு ஆராய்ச்சி பன்றதையே பொழப்பா
வெச்சிட்டிருக்கானுங்க... யார் மாதிரி இருந்தா என்ன? ஓர் புதிய ஜீவன் இந்த உலகிற்கு வந்திருக்கு. அதை வரவேற்று
தூய எண்ணத்துடன் அந்த உயிரை வாழ்த்தலாம். அந்த குழந்தை நன்றாக வளர்ந்து பெரிய பெரிய நல் விஷயங்களை செய்யவேண்டும்
என்று நினைக்கலாம். அதைவிட்டு, யார் மாதிரி இருக்கு என்றே ஆராய்ச்சி செய்யறோம். இதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று
எனக்கு தெரியவில்லை.

இதை பற்றியெல்லாம் அந்த ரெண்டு பேர்கிட்டயும் பேசினா, உடனே தர்க்கம் பன்றேன், ஏன்டா இப்படி யோசிக்கிறாய்
என்று என்மேலேயே தப்பு, சரி - ன்னு ஆரம்பிச்சுடுவானுங்க... நட்பில் விரிசல் விழுந்துவிடும். வேண்டாப்பா சாமி...!
மனசுல நினைச்சதோட நிறுத்திக்க...)

-எழுதியது
ஆ.வி.குமார்.

Friday, November 25, 2011

தந்தையின் மனம்...

தந்தையின் மனம்...

வயதும் வருமானமும் இருந்த பொழுது திருமணம்.
சந்தோஷங்கள் நிறைந்த வாழ்க்கை...
வருடங்கள் பல சென்றன.
தொழிலில் பின்னடைவு.
வேறு தொழில் செய்யவும் வழியில்லை.
பருவத்தை எதிர்கொண்டிருக்கும் 3 பிள்ளைகள்.
தந்தைக்கு வருமானம் இல்லாமல் போனது.
தாயும் படிப்பறிவில்லாதவள்.
தினம் தினம் சம்பாதித்து பிழைப்பு செய்ய வேண்டிய நிலை.
கெளவரமாக உடை அணிந்திருந்தாலும் சோற்றுக்கு வழியில்லை.
தினமும் காலையில் வரும் முதல் வேலையை வெகுவாக முடித்து...
அதில் வரும் வருமானத்தை கொண்டு மதிய உணவு செய்து சாப்பிட வேண்டும்.
காலை உணவாக நேற்றைய மீதம் இருக்கும்... சில நாட்களில் இல்லாமலும் போகும்.
காலையிலேயே அப்பாவிடம், அம்மா மதிய உணவிற்காக பணம் கேட்பாள்.
தந்தையிடம் இருந்தாள் உண்டு, இல்லையென்றால் கடிந்துவிட்டு சென்றுவிடுவார்.
அம்மாவின் புலம்பல் ஆரம்பிக்கும்!
"பிள்ளைகளுக்கு சோறு கூட போட வக்கு இல்லாத உன்னை கட்டிக்கொண்டு நான் படுற பாடு இருக்கே!..."
அம்மாவின் மனம் எப்பொழுதும் குடும்பத்தை பற்றித்தான் கவலைபடும்.
ஆனால், தந்தைக்கு நிறைய கவலைகள்...
தொழில் செய்யும் இடத்திற்கு சென்றால் ஏகப்பட்ட பிரச்சினைகள்.
தொழில் இல்லை, கடன் தொல்லை, மாதம் பிறந்தால் வாடகை தொல்லை, மற்ற செலவுகள் தொல்லை...
என்று எந்த திசையிலும் பிரச்சினை... இவை அனைத்தையும் சமாளிப்பது தந்தையின் கடமை.
ஆனால், ஒரு எல்லைவரை தான் ஒரு சதாரண நடுத்தர வர்க்க தந்தையால் முடியும்.
பணம் கையில் இல்லையென்றால் தந்தையின் நிலை - மன நிலை,
ஒரு முடிவில்லாத நெடுஞ்சாலையில் தனியாக பயணம் செய்யும்.
வழியில் நிறைய பிரச்சினைகள் கண்ணில் தெரியும்.
மற்ற எல்லா பிரச்சினைகளையும் ஒருவாக சமாளித்துவிடலாம்.
பிள்ளைகளின் பசியை எப்படி சமாளிப்பது?
இதயத்தை ஊசியால் குத்துவது போன்ற உணர்வு...
எங்கேயாவது ஓடி, யாரிடமாவது ஒரு 50 ரூபாய் கடனாக வாங்கி வந்து அம்மாவிடம் கொடுக்க,
அம்மா - இந்த ரூபாயை வைத்து ஒன்றும் வாங்க முடியாது, இதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய..!?
5 பேருக்கு சமையல் செய்ய வேண்டும். அம்மாவின் நிலை கொஞ்சம் சிரமம்தான். அவள் எப்படியாவது சமாளித்து சமையலை முடிப்பாள்.
பின், மதியமும் சாயங்காலமும் சேர்ந்த வேளையில் மதிய உணவு சூடாக சுவையாக, அனைவரும் வட்டமாக அமர்ந்து சாப்பிட்டு முடிப்பார்கள்.
தந்தையை தவிர மற்றவர் அவரவர் வேலையில் கவனத்தை செலுத்துவார்கள்.
தந்தை மனதிற்குள், "இன்றைய நிலையை சமாளித்தாச்சு... நாளைக்கு?"

-எழுதியது
ஆ.வி.குமார்.

Sunday, December 5, 2010

பக்கு...பக்கு...





"புண்பட்டு நின்றதடா என் நண்பனின் மனம்...
ஐயகோ...
கண்டுக்காமல் போவது இந்த பெண்ணின் குணம்..."

இந்த வரிகளை எனது நண்பர்களில் ஒருவர் மிக அழகாக, கேலியாக, ரசிக்கும்படியாக அடிக்கடி சொல்வார். அவர் சொல்வதை

கேட்பவர் யாராக இருந்தாலும், தன் நிலை மறந்து, உடன் வாய்விட்டு சிரிப்பார்கள். ஒரு நிமிடமேனும், சந்தோஷம் அடைவார்கள்.

ஆனால், இந்தக்கால திரைப்பட இயக்குநர்களில் சிலர், 3மணி நேரம் நம்மை அழ வைக்கிறார்கள். சமிபத்தில "வெற்றி"கரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு படத்திற்கு சென்று, பொழுதை போக்கினோம். எனக்கு தெரிந்தவரை, பொழுதுபோக்கு என்பது ஓரளவுக்கு ரசனையுடன் இருக்க வேண்டும். ஆனால், இந்தப்படம் ரசிக்கும்படியாக இல்லை என்பதே எங்களின் வருத்தம். படம் பார்த்து
வெளியே வரும்பொழுது, எங்களுக்குள் ஒருசில உரையாடல்கள்...

அதை blog-ல் எழுதினால் என்ன என்று தோன்றியது. உடன் செயல்படுத்திவிட்டேன். நாங்கள் மூவர் சென்று இந்தப்டம் பார்த்தோம். நான் நபர் 3 என்று வைத்துக்கொண்டு, மேற்கொண்டு படியுங்கள...

நபர் 1: படம் ஆரம்பிக்கும் போது கொடுத்த introவுக்கும், முடிவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தெரியவில்லை...
நபர் 2: அதையெல்லாம் கேட்கக்கூடாது. அவர்கள் என்ன படம் திரையில் காட்டுகிறார்களோ, அதை பார்க்கவேண்டியது நம் கடமை. குறுக்கு கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.
நபர் 1: அதுவும் சரிதான். நாம் இதைப்பற்றி விவாதித்து ஒன்றும் ஆகப்போவதில்லை...
(இங்கே சற்று நேரம் இடைவெளி...)
நபர் 1: அதெப்படி கேட்கக்கூடாது என்று சொல்லலாம். நான் கேட்பேன். ஆரம்பம் என்னவோ நன்றாகத்தான் இருந்தது. ஆனால், முடிக்கும்போது என்னவோ குறை இருக்கிறது. ஏன் இப்படி படம் எடுக்கிறார்கள்?
நபர் 2: அதெல்லாம் இப்படித்தான் எடுப்பார்கள், நாம என்ன பன்றது...?
நபர் 1: இதுல, fm-ல வேற ஆர்யா, ஸ்ரேயா, சந்தானம் மூவரும் சேர்ந்து நடித்திருக்கும் ஒரு ஜாலியான படம் - னு விளம்பரம் வேற... இந்த முனு பேர்ல யார் உண்மையா நடிச்சிருக்காங்க...? மத்தவங்களாவது ஏதோ நடிச்சிருக்காங்கன்னு சொல்லலாம்... சே. என்ன கொடும சார் இதெல்லாம்...!?
நபர் 2: விளம்பரம்னா அதான்...
நபர் 1: இதுல சந்தானம் எப்படியா, டைரில - பிளாஷ்பேக் கதையில வறாரு...!? அதாவது கதைப்படி பார்க்கும்போது, மகன் ஆர்யா... அப்பாவோட டைரிய படிக்கிறார். அதுல அவங்க அப்பவோட காதல் அவருக்கு தெரியுது...! இந்த டைரி கதையில, சந்தானம் எப்படி வந்தார். அப்பா ஆர்யா, training எடுத்துக்கற காலத்துல கூடவே சந்தானமும் training எடுத்துக்கற இன்னொரு நபர். ஒரு frame-ல யாவது அப்பா ஆர்யாவையும், சந்தானத்தையும் ஒன்றாகவோ, இல்ல அப்பா ஆர்யாவோட தோழனாகவோ காட்டவும் இல்லை... சொல்லப்படவும் இல்லை. பின் எப்படி, அப்பா ஆர்யாவோட டைரியில சந்தானம் என்ற கதாபாத்திரம் வந்தது...!?
நபர் 2: இந்த கேள்விய நீங்க கதை ரெடி பன்னவன்டாதான் போய் கேட்கனும். என்கிட்ட கேட்டா, எனக்கென்ன தெரியும்.
நபர் 1: சரி, உன்கிட்ட இன்னொரு கேள்வி கேட்கிறேன். கண்ணாடி போட்டவனெல்லாம் முட்டாளா...!? அதென்ன எல்லாப்படத்துலயும், ஒரு சோடபுட்டி கண்ணாடி போட்டவன கொஞ்சம் குறைவான ஆளாவே காட்டுறானுங்க...!? இதென்ன எழுதப்படாத சட்டம்?
நபர் 2: இதுக்கு நான் என்ன சொல்லமுடியும். அவங்க எடுக்கறதுதாங்க படம். இப்ப பன்ற படமெல்லாம் அப்படித்தானே எடுக்கிறாங்க...
நபர் 1: எல்லாப்படம்னு சொல்லக்கூடாது... ஏன் நீ, நாடோடிகள் படம் பார்க்கலையா... பசங்க படம் பார்க்கலையா... இந்த டைரக்டர்சும்தான் படம் பன்றாங்க. இவங்களெல்லாம் ரசிக்கும்படியும், நமக்கு பொழுது போகும்படியும் படம் பன்றாங்கள்ல... இவங்களும், இந்தக்கால டைரக்டர்ஸ்தானே.
நபர் 2: இதுல, பெரிய காமெடி என்னன்னா..., இந்த படத்த ஆரம்பிக்கும் போது, டைரக்டர் ஜீவா புகைப்படத்த காண்பிச்சு அவர் பேர வேற கெடுத்துடானுங்க.
நபர் 1: அப்புறம், ஸ்ரேயா... என்ன நடிச்சிருக்கு...!
நபர் 2: அவள விடுங்க, ஆர்யாவுக்கு இதுல என்ன நடிப்பிருக்கு... சும்மா வரதும், பேசறதும்... போறதும்னு. என்னதான்ய நடக்குது இங்க...? இதே போலத்தான் பாஸ்கரன்-லயும். ஒன்னுக்குமே உதவாத கேரக்டர். சந்தானத்திற்காக படம் ஓடியது.
நபர் 1: இதுல, ஆர்யா - எங்கேயோ போய், தமிழ்நாட்டு சினிமாவைப்பற்றியும், தமிழ் ரசிகர்களைப்பற்றியும் - ஏதோ சொல்லி வம்புல மாட்டிக்கி்ட்டானாம். அது என்னன்னு விபராமா தெரியல...
நபர் 2: அப்படியா... இது வேறயா...!?
நபர் 1: சரி, இந்த படத்தக்கூட சகிச்சுக்கலாம்... 200 கோடி, 300 கோடின்னு செலவு பண்ணி படம் எடுத்தாமட்டும்... படம் நல்லாயிருக்கா என்ன. அதுவும், இதைப்போலத்தான் இருக்கு. கேட்டா, நாங்க அங்க போனோம், இங்கே போனோம், அப்படி படம் எடுத்தோம், இப்படி படம் எடுத்தோம்னு எந்த சேனல் பார்த்தாலும் இவனுங்க பன்னின அலம்பல் தாங்க முடியல.
நபர் 2: புரியுது... புரியுது... ஷங்கர் படத்தைத்தானே சொல்றீங்க...
நபர் 1: ஆமாம். இவரு தந்திரன், எந்திரன் - அப்படி இப்படின்னு, எல்லா ஹாலிவுட் படத்துல இருந்தும் பிட் அடிச்சு அதுல கொஞ்சம் தமிழுக்கு தகுந்த மாதிரி - பிரசவம் பார்க்கின்ற சென்டிமென்ட்ட உள்ள போட்டு... ஒரு மாதிரியா பணம்
பார்த்துட்டானுங்க. இதே டைரக்டர்தான் சிவாஜினு ஒரு படம் பன்னினார். கருப்பு பணத்தை வெள்ளையா மாத்தினார். நல்லாயிருந்தது... ஆனால், இவரே இப்படி இத்தனை கோடிகளை வீணடிப்பார்னு எதிர்ப்பார்க்கலை... நாலு பேருக்கு நல்லா
சொறாவது போட்டிருக்கலாம்.
நபர் 2: அதையெல்லாம் விடுங்க... நம்ம விஜய் படம் ரிலீசாகட்டும். அப்புறம் பாருங்க...
நபர் 1: யோவ்... கொடும கொடும னு கோயிலுக்கு போன அங்க ஒரு கொடும டேன்ஸ் ஆடிட்டிருக்கும்.
நபர் 2: இந்த படங்களை எல்லாம் பார்க்கும் போது... விஜய் படம் மட்டும் பார்க்க மாட்டீங்களா...?
நபர் 1: இந்த படங்களை - இந்த படங்களோட விளம்பரங்கள பார்த்து, கேட்டு - சரி படம் பார்ப்போம்னு தோணும். வருவோம். ஆனால், இளையதளபதி - படத்தோட விளம்பரங்கள் பார்த்தாலே... சும்மா. பத்திகிட்டு எரியும்ல... அப்புறம் எங்கிருந்து
தியேட்டருக்கு வற்ரது...!?
நபர் 2: அப்படின்னா, நீங்க வேற ஒருத்தரோட ரசிகர். அப்படித்தானே...?
நபர் 1: அப்படியெல்லாம் இல்ல. ஏன், இதே விஜய் நடித்த போக்கிரி படம் பார்த்தேன். நல்லாயிருந்தது. யார், நடிச்சாலும் படம் நமக்கு பொழுது போக்கா இருந்ததா... நம்மை மறந்து படத்தினுள் மூழ்கினோமா...! அதுதான். முக்கியம். அதவிட்டு, ஏன்டா... இந்தப்படத்துக்கு வந்தோம்னு நினைச்சா, அதில் என்ன உபயோகம் இருக்கு...?
நபர் 2: மொத்ததுல என்னதான் சொல்ல வறீங்க...!?
நபர் 1: மொத்தத்துல நான் சொல்றது என்னன்னா...? படம் படமா இருக்கனும்னு சொல்றேன். படம் எடுக்கத் தெரியதவனெல்லாம் படம் பன்னக்கூடாதுன்னு சொல்றேன். புதிய டைரக்டருக்கு வாழ்வு கொடுக்குறோம்னு சொல்லிகிட்டு,
தாயாரிப்பாளர்கள் அவங்க வாழ்க்கைய தொலச்சிடக்கூடாதுன்னு சொல்றேன். காசு, கொடுத்து நேரத்த வீணாக்கற மக்களுக்கு நாம பணத்தையும், நேரத்தையும் வீணடிச்சிட்டோமோன்னு நினைக்க வைக்க கூடாதுன்னு சொல்றேன். நல்ல நல்ல கதைகளை படமா காட்டலாம்னு சொல்றேன். உங்காந்து ரூம் போட்டு டிஸ்கஷன் பன்னும்போது, சின்ன சின்ன விஷயங்கள்ல அதிக கவனம் செலுத்தலாம்னு சொல்றேன். ஹாலிவுட் படத்த பார்த்து காபி குடிக்காம... சாரி... காபி அடிக்காமா... சொந்தமா கதை உருவாக்க சொல்றேன். லாஜிக் ஓட்டைகள் இல்லாத படம் பன்ன சொல்றேன்... லிங்குசாமி மாதிரி ஒரே ஹை-வேயேயையே
மறுபடி மறுபடி காட்டாதீங்கன்னு சொல்றேன்...
நபர் 2: ஐயோ சாமி... போதும், போதும்... நிறுத்துங்க... ஆளவிடுங்க.
நபர் 1: அப்படியெல்லாம் நிறுத்த முடியாது...
நபர் 2: நான் கிளம்பறேன். நேரம் ஏற்கனவே நிறைய வீணாப்போச்சு...
நபர் 1: சரி.. சரி. போயிட்டு வாங்க... மீண்டும் இன்னொரு மொக்க சினிமாவில சந்திப்போம்.

-எழுதியது
ஆ.வி.குமார்.

Saturday, April 17, 2010

இலவசம் ! இலவசம் !! இலவசம் !!!



1. ஒன்று வாங்கினால்... இரண்டு இலவசம்.
2. 20% Extra... 50% Extra.
3. சோப் வாங்கினால் வீடு இலவசம்.
4. வார இதழ் வாங்கினால் மொபைல் இலவசம்.

அதெப்படி ஒரு பொருளுக்கான விலையை கொடுத்தால்,
அதே வகையில் இன்னும் இரண்டு பொருள்களை இலவசமாக கொடுப்பார்கள்.
விற்பவர்களுக்கு அறிவில்லையா என்ன?

கொஞ்சம் யோசித்தோமானால் மூன்று பொருள்களுக்கும் சேர்த்தேதான்
நாம் பணம் கொடுத்து வாங்குகிறோம். இதில் வாங்குபவருக்குதான் அறிவு
அந்த நேரத்தில் வேலை செய்வதில்லை.

சரியான விலை கொடுத்து வாங்கினாலே பொருள்கள் தரமானதாக இல்லாத
இந்த காலகட்டத்தில், இலவசமாக கொடுக்கப்படும் பொருள்களின் தரம்
எப்படி இருக்கும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வியாபார உக்தியின் பிடியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பொதுமக்களின்
நிலையை நினைத்து எனக்கு சமுதாய கோபம் வெளிப்படுகிறது.
நம் மக்கள் இலவசம் என்றால் வாயை பிளந்து கொண்டு வரிசையில் நின்று
அடித்து, பிடித்து அதை வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை பார்க்கும் போதும்
கோபம் ஏற்படுகிறது.

மக்கள் தன் சொந்த உழைப்பில் ஒரு பொருளை வாங்கி சந்தொஷம் அடைவதைவிட... இலவசமாக கிடைக்கும் பொருள்களில் கிடைக்கும் சந்தோஷத்தையே பெரிதென கருதி அற்ப ஆனந்தம் அடைகின்றனர்.

உழைக்காமல் வந்த பலன் வெகு நாட்கள் இன்பமளிக்காது என்பது தெரிந்திருந்தும் கிடைத்தவரை லாபம் என்னும் சில நாள் சந்தோஷத்திற்கே அலைகின்றனர்.

ஏன் மக்கள் மனது இப்படி மாறியது, அலைகிறது?
எல்லாம் வியாபாரத்தின் சதி.
மக்களை உழைக்க விடாமல், எதை எடுத்தாலும் இலவசம் இலவசம் என்று
விளம்பரம் செய்து மக்களை சோம்பேறிகளாக்கி வைத்துள்ளனர்.

பேச்சு வழக்கில் ஒன்று சொல்வார்கள் சிலர்.
"ஓசியிலே கிடைத்தால் ஃபினாயில கூட வாங்கி குடிப்பார்கள்" என்று.
இந்த நிலைமை வெகு சீக்கரத்தில் வரக்கூடிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

இலவசத்திற்கு அலையும் மக்கள் ஏன் யோசிப்பதில்லை.
100 பேரில் 10 பேருக்கு மட்டும் கண் துடைப்பாக ஒரு சில இலவச பொருட்களை
கொடுத்துவிட்டு எஞ்சியுள்ள 90 பேரிடமிருந்தும் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள் வியாபாரிகள் என்று. அதாவது 90 நபர்களை முட்டாள்களாக்கி, 10 நபர்களை சோம்பேறிகளாக்கும் முயற்சிதான் இது என்பது என் கருத்து.

வியாபாரிகள் ஏன் இலவசமாக ஒரு பொருளை கொடுக்க வேண்டும்!?
இலவசம் என்ற பெயரில் சூட்சமமாக லாபம் பார்க்கிறார்கள்.
இவர்கள் லாபம் பார்ப்பது நேர்மையான வழியிலா?
குறுக்கு வழியில் மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்கிறார்கள்.
வியாபாரத்தில் லாபம் பார்க்க மக்களை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்று சட்டம் ஏதேனும் இருக்கிறாதா?
இவர்கள் செய்யும் இந்த வியாபார தந்திரம் நியாமானதா? சரியானதா? தவறானாதா? - எனக்கு புரியவில்லை.
இதை படிக்கும் லாப நோக்கு வியாபாரிகள் தக்களுக்கு சமுதாயத்தின் மேல் அக்கறை இருக்குமானால்,
நேரம் கிடைத்தால் பின்னூட்டங்களின் மூலம் விளக்கம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

எடுத்துக்காட்டாக 200 ரூபாய் என விற்கப்பட்ட பொருள் 400 ரூபாயாக மாற்றப்படுகிறது. ஆனால், "ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்" என்ற போர்வையில் இரண்டு பொருள்கள் விற்கப்படுகிறது.
ரூ.400 என விற்கப்படும் இரண்டு பொருள்களின் தரமும் ரூ.100க்கு கூட பொருமானமுள்ளதாக, தரமானதாக இருப்பதில்லை.
வாங்கிவந்த ஓரிரண்டு நாட்களில் அந்த பொருள் தன் வேலையை காண்பித்து விடுகிறது. ஆக இரண்டுக்கு பதிலாக ஒரு பொருளையே தரமானதாக, சரியான விலையில் ஏன் விற்கக்கூடாது?

மார்க்கெட்டில் விலை போகாத பொருட்களை இலவசம் என்ற பெயரில் அதிக லாபத்தில் விற்றால் நாம் அந்த தந்திரத்தை அறியாமல் கூட்டத்தில் அடித்து பிடித்து அந்த வீணாக போன பொருளை வாங்கி பின் ஏமாறுகிறோம்.
இதில், யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு நமக்கு கிடைத்ததென பெருமிதம் வேறு.
தமிழ்படங்களில் வரும் வசனங்கள் போல "என்ன கொடும சார் இது?".

(இந்த இடுகை, தனி மனித கருத்து தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதை படிக்கும் ஒரு சிலராவது இனிமேல் இலவசத்தின் மேல் அக்கறை காட்டாமல் இருப்பார்கள் எனில்,
நான் உண்மையான ஆனந்தம் கொள்வேன். அனைவருக்கும் நன்றி.)

எழுதியது
- ஆ.வி.குமார்.

Saturday, December 5, 2009

ரூ.3 ஐ இழந்தால் ரூ.10000 உங்களுக்கு?

ரூ.3 இழந்தால் ரூ.10000 உங்களுக்கு?




"இந்த கதையில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே! இறந்தகால, நிகழ்கால நிகழ்வுகளுக்கும் மனிதர்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை!"

இந்த வரிகளை முதலில் காண்பித்துவிட்டு நடந்த, நடந்துகொண்டிருக்கிற சம்பவங்களையே வெள்ளித்திரையில் காண்பிக்கும் உக்தியைப்போல்,
பின்வரும் விமர்சனமும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் மனிதர்களுக்கும் சம்மந்தமல்ல!

இதை படித்துக்கொண்டிருக்கும் உங்களிடம் இரண்டொரு கேள்வி?
சின்னத்திரையில் வியாபார நோக்கத்தில் எத்தனை எத்தனையோ உக்திகள் செயல்முறைபடுத்தப்படுகின்றன என்பதை மக்கள் அனைவரும் அறிவார்களா...?

எனக்கு தெரிந்தவரை லாட்டரி வியாபாரம் தமிழ்நாட்டில் செய்யக்கூடாது என்ற தடை சில வருடங்களாகவே நடைமுறையில் உள்ளது. ஆனால், அதே வியாபாரத்தை வேறு ஒரு முறையை கடைபிடித்து செய்யும் அறிவாளிகளின் ஏமாற்று வித்தையை மக்கள் அறிவார்களா...?

புத்தர் சொன்னது போல் ஆசையே அனைத்திற்கும் காரணம். ஆசையை ஒழி.
வாழ்க்கையில் தொடர் முயற்சி செய்து உழைத்து முன்னேறு... போன்ற நல்ல விஷயங்கள் நிறைய இருக்கும் போது, மக்களாகிய நாம் எந்தவிதமான முயற்சியையும் உழைப்பையும் கொடுக்காமல் இலவசம் என்ற பேரில் யார் எதை கொடுத்தாலும் அடித்து பிடித்து வாங்கி அதில் அற்ப சந்தோஷத்தை அனுபவித்து கொண்டிருக்கிறோம்.

Free - இலவசம் - Free என்றால் உடனே முன்டியடித்துக்கொண்டு சென்று வாங்கவேண்டிய பொருளுடன் "இலவசமாக" என்று ஏமாற்றி கொடுக்கும் பொருளுக்கும் சேர்த்து பணத்தை நமக்கு தெரியாமலேயே மறைமுகமாக கொடுத்து அப்பொருட்களை வாங்குகிறோம் என்பது தான் உண்மை.

இதற்கும் நான் இங்கே விமர்சனம் செய்திருக்கும் விஷய்த்திற்கும் என்ன சம்மந்தம்? இருக்கின்றது என்பது என்னுடை எண்ணம். எல்லாம் வியாபர உக்திதான். இதைபோன்ற ஒரு வியாபார உக்தியைத்தான் நான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். சமீபகாலமாக, பெயர்பெற்ற ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு லாட்டரி ஷோவைப்பற்றியதுதான்.
இதைப்போல பல்ப்பல நிகழ்ச்சிகள் பலப்பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, இன்னமும் வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் வெற்றியின் ரகசியம் என்ன? அவர்கள் என்னவிதமான வியாபாரம் செய்கிறார்கள்?
இதோ பதில்...

தொலைகாட்சி நிறுவனத்திற்கும் மொபைல் நெட்வொர்க் நிறுவனத்திற்கும் ஒரு ஒப்பந்தம் போடப்படுகிறது. விஷேஷ sms எண்கள் ஒதுக்கப்படுகிறது. அந்த எண்களுக்கு மக்களாகிய நாம் sms அனுப்பினால் நமது பணம் ரூ.3 அதற்கு கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும்.
(இதுதான் வியாபாரம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.)

இதையே கொஞ்சம் ஆழமாக அனுகினால்... தமிழ்நாட்டில் சுமார் 6 கோடி மக்கள் தொகை.
இந்த 6 கோடி நபர்களில் குழந்தைகளையும் வயதான முதியவர்களையும் விட்டுவிட்டால் மீதம் 3 கோடி நபர்கள் வருகிறார்கள் என்று வைக்கலாம். இந்த 3 கோடி பேர்களில் அனைவரும் மொபைல் பயன்படுத்துவார்கள் என்று சொல்லமுடியாது. சுமாராக 1 கோடி பேர் மொபைல் சர்வீஸ் பயன்படுத்துபவர்கள் என்றும் வைக்கலாம். இந்த 1 கோடி நபர்களில் அத்தனை பேரும் ஆசைக்கு அடிமையானவர்கள் என்றும் சொல்லமுடியாது அல்லவா... அதனால் ஒரு பாதி நபர்களை எடுத்துக்கொள்வோம். 50 இலட்சம் பேர் இந்த மாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தங்களுடைய மொபைல் சர்விஸிலிருந்து
ரூ.3 செலவு செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

இப்பொழுது நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
சுமார் 50 இலட்சம் நபர்கள் ரூ.3 செலவு செய்தால், மொத்தத்தில் ரூ.150 இலட்சம் அந்த நிகழ்ச்சி நடத்தும் தொலைகாட்சி நிறுவனத்திற்கும் மொபைல் சர்வீஸ் நிறுவனத்திற்கும் அவர்களின் ஒப்பந்தப்படி சென்றடைகிறது.

இந்த மொத்த தொகையில் அதிகபட்ச தொகையாக ரூ.50,00,000 - நிகழ்ச்சியில் பங்குபெறும் நபருக்கு கொடுக்கப்படுமாம். எந்த ஒரு பங்கேற்பாளரும் அவ்வளவு எளிதில் இந்த 50 இலட்சத்தை பெறமாட்டார். அப்படி இருக்கையில், அப்படியே ஒரு பங்கேற்பாளர் நிகழ்ச்சியில் வெற்றிபெற்று ரூ.50 இலட்சத்தை மகிழ்ச்சியாக
பெற்று செல்கிறார் என்றால் அது நமக்கும் சந்தோஷம்தான். ஆனால், அப்படி நடக்கிறாதா என்றால் இல்லை. பங்கேற்பாளர் கட்டாயம் ஏதோ ஒரு பகுதி பணத்தை அவருக்கென்று கட்டாயம் எடுத்து செல்வார். அதில் சந்தேகமில்லை.
அப்படி அவர் எடுத்துக்கொண்டு போகும் பணத்தைவிட்டு மீதம் அனைத்தும் மேற்சொன்ன இரு நிறுவனங்களுக்கும்தான்.

ஒரு மணிநேர ஒளிபரப்பில் இரண்டு நிறவனங்கள் சேர்ந்து 1.5 கோடி அளவில் தமிழ்நாட்டு மக்களிடம் மட்டும் சம்பாதித்தால், மற்ற மாநிலங்கள், மற்ற நாடுகளிலிருக்கும் நபர்களிடமிருந்து எத்தனை எத்தனை கோடிகள்
சம்பாதிக்கிறார்கள்? இப்படி சம்பாதித்து எந்த ஒரு நல்ல காரியத்திற்கு செலவு செய்கிறார்கள்? கொண்டுபோய் வெளிநாட்டிலிருக்கும் வங்கிகளில் அவர்களுக்கும் அவர்களின் சுற்றதாருக்கும் பயன்படும்வகையில் சேமித்துக்கொள்கின்றனர்.

இது எப்படி தெரியுமா இருக்கின்றது... மக்களிடமிருந்து பணத்தை பறித்து கண்துடைப்பாக ஒரு பகுதி பணத்தை அவர்களுக்கு திருப்பி கொடுத்து மீதத்தை சுருட்டிக்கொள்வது என்றுதான் பொருள்படுகிறது. இப்படி கிடைக்கும்
பணத்தை வைத்தே அவர்கள் அந்தந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி, இன்னும் இதுபோல் பலப்பல நிகழ்ச்சிகளை நடத்தி அவர்கள் பணம், பலம் படைத்தவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்க்ள. அதை "..." வென்று வாயை
பிளந்துகொண்டு நாம் வேடிக்கை பார்த்தும், அந்த நிகழ்ச்சிகளை பார்த்து பரவசமும் அடைகிறோம். நல்ல வேடிக்கையான நிகழ்ச்சி?

இதில் ஒரு விஷேஷமான விஷயம் என்னவென்றால்? அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் வேளையில் நடு நடுவில் "பார்வையாளர்கள் கவனிக்கவும்! உங்களுக்கும் ஒரு பகுதி பணம் வழங்கப்படும். நீங்கள் உங்கள் மொபைலிலிருந்து
sms அனுப்பவும். அதுவும் உடனேவோ இல்லை நாளை மதியம் 12 மணிவரையோ அனுப்பிக்கொண்டே இருங்கள்."
- என்று சொல்வார். நாம அனுப்பலைனா அவர்களால இந்த நிகழ்ச்சிய நடத்த முடியாது இல்லையா...? அதனால எல்லோரும் கண்டிப்பா ரூ.3 செலவு செய்யுங்கள். கிடைத்தால் இலாபம். இல்லையென்றால் ரூ.3 தானே? போனால் போகட்டும்.

இந்த ரூ.3 வீதியில் சோற்றுக்கே வழியில்லாமல், முடியாமல் இருக்கும் ஒருவருக்கு டீ கூட வாங்கிக்கொடுக்க நாம் விரும்ப மாட்டோம். காரணம் ஆசை... உழைக்காமலே நம் கையில் ரூ.10000. நல்லது.

(மேற்சொன்ன விஷயத்தில் தவறான செய்தி இருந்தால் அதை தெரியப்படுத்த வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். இவை என் சிந்தனையில் தோன்றியவைதான். தவறை சுட்டிக்காட்டுவீர்கள் என்ற நல்ல
எண்ணத்தில்தான் blogspot-ல் எழுத நினைத்தேன்.)

நன்றி,
எழுதியது
-.வி.குமார்.

Friday, October 30, 2009

மனைவி...?

அழகாக இருந்தும் "தான் ஒரு அழகி" என்ற அகம்பாவம் கொண்டவளாக இல்லாமல் இருந்தால்...

எதற்குமே எரிந்து பொறிந்து தள்ளாதவளாக, "வாயாடியாக" இல்லாமல் இருந்தால்...

தங்கத்தின் மீதும் அணிகலன்கள் மீதும் "மோகம்" இல்லாமல் இருந்தால்...

கல்யாணத்திற்கு பிறகு வெளித்தோற்றத்திற்கு கணவன் மனைவியாகவும், வீட்டினுள் "எலியும் பூனையுமாக" இல்லாமல் இருந்தால்...

மாதத்தில் இருபத்தைந்து நாட்கள் சண்டையாகவும் மீத நாட்களில் மட்டும் "சந்தோஷமாக - பொய்யாக" வாழ்வது இல்லாமல் இருந்தால்...

எல்லாம் தெரிந்திருந்தும் "தற்பெருமை" பேசாமல் அளவுடன் பேசுபவளாக இருந்தால்...

எந்த சூழ்நிலையையும் "துணிவுடன்" எதிர்கொள்பவளாக இருந்தால்...

எப்பொழுதும் "சுறுசுறுப்புடனும் மன திடத்திடனும்" இருந்தால்...

கணவன் "குணத்தை அறிந்து" நடந்துகொள்பவளாக இருந்தால்...

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே இதில் "ஆவது" மட்டும் இருந்தால்...

சேலை வாங்க கடைக்கு சென்றால் உடன் எடுக்கும் "திறமை" கொண்டவளாக இருந்தால்...

சுடிதார் அணியும்போது ஷாலைகொண்டு கழுத்தை மறைக்காமல் இருந்தால்...

இருப்பதை கொண்டு, "புலம்பாமல்" குடும்பத்தை திறம்பட நடத்தி செல்பவளாக இருந்தால்...

தனக்கு "பொருந்தாத அழகு கலையில்" ஈடுபடதவளாக இருந்தால்...

"வேலைக்கு சென்றாலும்" வீட்டு வேலைகளையும் திறம்பட செய்பவளாக இருந்தால்...

ஆண் "சமைக்க வேண்டும்" என்ற எண்ணம் இல்லாதவளாக இருந்தால்...

தன் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் எப்பொழுதும் "சுத்தமாக" வைத்திருப்பவளாக இருந்தால்...

அடித்தாலும் புடித்தாலும் "நீதான் மச்சான்" என்று சுற்றிவருபவளாக இருந்தால்...

முடிவில் ஆணும் பெண்ணும் "சமம்" என்று சொல்லாமல், இருவருக்கும் வெவ்வேறு குணங்கள் உள்ளன என்பதை புரிந்தவளாக இருந்தால்...

இந்த கணினி-யுகத்தில் இது சாத்தியமா...?

இப்படி ஒரு மனைவிக்காக ஏங்கும் ஒரு இளைஞனுக்கு...

*இதை படிக்கும் கணவன்மார்கள், பெரியவர்கள் ஏதாவது அறிவுரைகள் சொல்ல நினைத்தால் உடனே தெரிவிக்கவும்.

*இதை படிக்கும் புதுமைப்பெண்கள், மனைவிமார்கள் ஏதாவது திட்டவேண்டும் என்று நினைத்தால் உடனே திட்டிதீர்த்துவிடுங்கள்.

- எழுதியது
ஆ.வி.குமார்