தந்தையின் மனம்...

வயதும் வருமானமும் இருந்த பொழுது திருமணம்.
சந்தோஷங்கள் நிறைந்த வாழ்க்கை...
வருடங்கள் பல சென்றன.
தொழிலில் பின்னடைவு.
வேறு தொழில் செய்யவும் வழியில்லை.
பருவத்தை எதிர்கொண்டிருக்கும் 3 பிள்ளைகள்.
தந்தைக்கு வருமானம் இல்லாமல் போனது.
தாயும் படிப்பறிவில்லாதவள்.
தினம் தினம் சம்பாதித்து பிழைப்பு செய்ய வேண்டிய நிலை.
கெளவரமாக உடை அணிந்திருந்தாலும் சோற்றுக்கு வழியில்லை.
தினமும் காலையில் வரும் முதல் வேலையை வெகுவாக முடித்து...
அதில் வரும் வருமானத்தை கொண்டு மதிய உணவு செய்து சாப்பிட வேண்டும்.
காலை உணவாக நேற்றைய மீதம் இருக்கும்... சில நாட்களில் இல்லாமலும் போகும்.
காலையிலேயே அப்பாவிடம், அம்மா மதிய உணவிற்காக பணம் கேட்பாள்.
தந்தையிடம் இருந்தாள் உண்டு, இல்லையென்றால் கடிந்துவிட்டு சென்றுவிடுவார்.
அம்மாவின் புலம்பல் ஆரம்பிக்கும்!
"பிள்ளைகளுக்கு சோறு கூட போட வக்கு இல்லாத உன்னை கட்டிக்கொண்டு நான் படுற பாடு இருக்கே!..."
அம்மாவின் மனம் எப்பொழுதும் குடும்பத்தை பற்றித்தான் கவலைபடும்.
ஆனால், தந்தைக்கு நிறைய கவலைகள்...
தொழில் செய்யும் இடத்திற்கு சென்றால் ஏகப்பட்ட பிரச்சினைகள்.
தொழில் இல்லை, கடன் தொல்லை, மாதம் பிறந்தால் வாடகை தொல்லை, மற்ற செலவுகள் தொல்லை...
என்று எந்த திசையிலும் பிரச்சினை... இவை அனைத்தையும் சமாளிப்பது தந்தையின் கடமை.
ஆனால், ஒரு எல்லைவரை தான் ஒரு சதாரண நடுத்தர வர்க்க தந்தையால் முடியும்.
பணம் கையில் இல்லையென்றால் தந்தையின் நிலை - மன நிலை,
ஒரு முடிவில்லாத நெடுஞ்சாலையில் தனியாக பயணம் செய்யும்.
வழியில் நிறைய பிரச்சினைகள் கண்ணில் தெரியும்.
மற்ற எல்லா பிரச்சினைகளையும் ஒருவாக சமாளித்துவிடலாம்.
பிள்ளைகளின் பசியை எப்படி சமாளிப்பது?
இதயத்தை ஊசியால் குத்துவது போன்ற உணர்வு...
எங்கேயாவது ஓடி, யாரிடமாவது ஒரு 50 ரூபாய் கடனாக வாங்கி வந்து அம்மாவிடம் கொடுக்க,
அம்மா - இந்த ரூபாயை வைத்து ஒன்றும் வாங்க முடியாது, இதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய..!?
5 பேருக்கு சமையல் செய்ய வேண்டும். அம்மாவின் நிலை கொஞ்சம் சிரமம்தான். அவள் எப்படியாவது சமாளித்து சமையலை முடிப்பாள்.
பின், மதியமும் சாயங்காலமும் சேர்ந்த வேளையில் மதிய உணவு சூடாக சுவையாக, அனைவரும் வட்டமாக அமர்ந்து சாப்பிட்டு முடிப்பார்கள்.
தந்தையை தவிர மற்றவர் அவரவர் வேலையில் கவனத்தை செலுத்துவார்கள்.
தந்தை மனதிற்குள், "இன்றைய நிலையை சமாளித்தாச்சு... நாளைக்கு?"
-எழுதியது
ஆ.வி.குமார்.