Monday, May 25, 2009

கடவுள் ???

இப்படி ஒருவன் இருப்பானெனில் அவனுடைய அலுவல்... படைத்தல், காத்தல், அழித்தல். ஆனால் படைப்பதும் அழிப்பதும் மட்டுமே தொழிலாக கொண்டுள்ளான்.
தக்க நேரத்தில் காக்க மறந்து விடுகிறான் அவன். இப்படி ஒருவன் உண்மையில் இல்லை.

இவ்வுலகையும் வான்வெளியையும் அடக்கி ஆள்கின்ற ஒரு சக்தியைத்தான் நாம் கடவுள் என்கிறோம். அந்த கடவுளுக்கு உருவம் கொடுத்து கடவுள் இப்படித்தான் இருப்பார். அவருக்கு இது இது வேலைகள் என்று மனிதனாகப்பிறந்தவன் மனித உருவாகவே கடவுள் என்னும் சக்தியை உணர்கிறான். அப்படி இருக்கையில் மனிதன்தான் கடவுள் எனப்படுபவன் என்பது என் கருத்து.

ஒரு மனித சக்தியை எடுத்துக்காட்டுக்காக எடுத்துக்கொண்டால், ஓர் உயிரையோ அல்லது ஒரு ஜடப்பொருளையோ உருவாக்கும் சக்தி அவனுள் இருக்கிறது. அப்படி உருவாக்கிய இரண்டு பொருள்களையுமே காக்கும் சக்தியும் அவனிடம் இருக்கிறது. அவ்விரு பொருள்களையும் அழிக்கும் சக்தியும் அவனிடம் இருக்கிறது. ஆக கடவுள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதானகப்பட்டவன் செய்கிறான். ஆக மனிதன் தான் கடவுள்.

ஆனால், மனிதனையும் அடக்கி ஆள்கின்ற சக்தி ஒன்று இருக்கின்றது. அதுதான் இயற்கை.
இயற்கையை எந்த ஒரு மனிதன் நினைத்தாலும் வெல்ல முடியாது. அடுத்த கனம் என்னவென்று மனிதன் அறியமுடியாது. ஆனால் இயற்கை அறியும். ஆக ஐம்பூதங்கள் எனப்படும் நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் - இவை ஐந்தும் தான் கடவுள். இவைகளை வணங்கி வழிபடுவதே சாலச்சிறந்நது...

இன்னொரு வகையில் இந்த உலகையும் மற்ற பிற கோள்களையும் அடக்கி தன் வசம் வைத்துள்ள சூரியனையும் நாம் கடவுளாக வணங்கலாம். சூரியனின் சக்தி கொண்டே பூமியில் அனைத்தும் நிறைவேறுகிறது. ஆழ்ந்து சிந்தித்தால் தானாக புலப்படும்...

இவைகளை விடுத்து சிற்பி செதுக்கிய கல்லை கடவுளாகவும், அதற்கு அந்த அபிஷேகம் இந்த அபிஷேகம் என்ற வீன் சடங்குகளாலும் மனிதன் அலைகழிக்கப்படுவது முட்டாள்தனம். இந்த கல்லை பார்பதற்கு நாம் நிறைய பணம் செலவு செய்யவேண்டும். அதிலும் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வோரு தெய்வ சிலைகள். அந்தத் துறைகளை அந்த கடவுள்தான் நிவர்த்தி செய்வார். அவரிடம் சென்று வரிசையில் காத்திருந்து அவனருகில் சென்றவுடன் பயபக்தியுடன் தலைதாழ்த்தி வேண்டினாலொழிய அவர் அவருடைய பிள்ளையாகிய மனிதர்களுக்கு உதவுவார். என்ன வேடிக்கை...?

அப்படி வேண்டிவிரும்பி பெறுவதற்கு அவருக்கு நாம் என்ன அடிமைகளா?
அப்படி நாம் அடிமைகள் என்றால் கடவுள் என்ன கெட்டவரா?
வேண்டுமென்றே நம்மை இவ்வுலகில் படைத்து, நமக்கு பலவழிகளில் துன்பத்தை கொடுத்து அதை வேடிக்கை பார்ப்பதுதான் அவர் வேலையா?

ஆக, மனிதன் இன்பப்படுவதற்கும் துன்பப்படுவதற்கும் மனிதனே காரணம்.
எல்லாம் அவன் செயல் அல்ல! எல்லாம் இவன் (மனிதன்) செயல்!

கடவுளையே உருவாக்கியவ்ன மனிதன். நம் முன்னோர்கள் மனித ஜென்மங்களை ஒரு கட்டுக்குள் வைக்க ஒரு மாயையை உருவாக்கினார்கள். அஃக்தாவது, நல்ல சக்தி, கெட்ட சக்தி... என்று. நல்ல சக்தியாக கற்சிலைகளையும், கெட்ட சக்தியாக நம் கண்களுக்கு தெரியாத இரவில் மட்டுமே உலகத்தை ஆட்கொள்ளும் கடவுளின் எதிரியான ஆவிகளையும் பிசாசுகளையும் படைத்தனர். இவற்றை வருங்கால சந்ததியினர் நம்புவதற்காக பல கதைகளை உண்மையாக நடந்ததாகவும் அதை அவர்கள் நேரில் பார்த்து அனுபவித்ததாகவும் சொல்லி நம்மை அவைகளுக்கு பய்ப்படும்படியும், அடிமைகளாகவும் செய்துவிட்டனர்.

நிகழ்கால மனிதர்களுள் இன்னும் பல பேர் நாம் எதற்காக இந்த சடங்குகளை செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளாமலேயே எல்லாம் பெரியவர்கள் சொன்னது, அதை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு நமக்கு மட்டும் கடவுள் நல்லது செய்ய வேண்டும் என்ற சுய எண்ணத்தில்தான் வழிபடுகின்றனர்.

இதை படிக்கும் தங்களுக்கு ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால்…
- எழுதியது
ஆவி.குமார்.